தமிழ்நாடு

முதல்முறையாக காவலர் தின கொண்டாட்டம்.. 46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

முதல்முறையாக காவலர் தின கொண்டாட்டம்.. 46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு
46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு
1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் இயற்றப்பட்டு, நவீன காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாளை இனி ஆண்டுதோறும் காவலர் தினமாகக் கொண்டாட, தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு அரசாணை பிறப்பித்திருந்தார்.

முதல் காவலர் தினக் கொண்டாட்டங்கள், தமிழ்நாடு காவல்துறைத் தலைமையகத்தில் சிறப்புத் திரையிடலுடன் தொடங்கின. 2023-ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம், நகரம், பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களுக்கு, காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில், காவலர் தின உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. காவல்துறையின் செயல்பாடுகளைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவலர் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நாளில், காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் படைத் தலைவர் தனது சிறப்புரையில், காவலர்கள் கடமை, மரியாதை, சேவை ஆகிய இலட்சியங்களுக்குத் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பயம், பாரபட்சம் இல்லாமல் நீதியை நிலைநாட்டுவது, ஒழுக்கம் மற்றும் நேர்மையைப் பேணுவது, பொதுமக்களுக்கு இரக்கத்துடன் சேவை செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.