தமிழ்நாடு

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? சட்டப்பேரவையில் காரசார விவாதம்

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது? என்று சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் திமுக அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ?  சட்டப்பேரவையில் காரசார விவாதம்



பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், தமிழகத்தில் வேலைக்காக இளைஞர்களும், வேலைவாய்ப்பு வழங்க நிறுவனங்களும் தயாராக உள்ளன. மாணவர்களுக்கு தொழில் பயிற்சித் திறனை அதிகரிக்க தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர் பயன்பெற்று வருவதாக கூறினார்.

வேலைவாய்ப்பு வழங்குவோருக்கும், வேலை தேடுவோருக்கும் இணைப்பு பாலம் கேட்டீர்கள். அதற்கு நான் முதல்வன் தான் அந்த இணைப்பு பாலம் என அமைச்சர் பதிலளித்திருக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் அந்த இணைப்பு பாலம் வலுவாக இருக்க வேண்டும் என்பதையே நான் தெரிவித்தேன் என்றார்.

உடனே, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அந்த இந்த இணைப்பு பாலம் பாம்பன் பாலம் போல இருக்காது. திராவிட மாடல் பாலம் தரமாகவும், உறுதியாகவும் இருக்கும் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வானதி ஸ்ரீனிவாசன் பாம்பன் பாலம் இந்திய தொழில் நுட்பத்தில் இந்திய பொறியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. திமுகவின் சித்தாந்தத்தை குறிப்பிடுவதாக கூறி இந்தியர்களின் பணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பதிலுரைத்தார்.

மீண்டும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்பொழுது, நீங்கள் பேரவைக்குள் சொல்வதும் உங்கள் கட்சித்தலைவர்கள் வெளியே பேசுவதும் வெவ்வேறாக உள்ளது. தமிழகம் பின் தங்கியிருப்பதை போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்களை போல பேசுகிறார்கள்

வானதி ஸ்ரீனிவாசன் அதற்கு மறுப்பு தெரிவித்து, சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை விட, என் நண்பர்கள் கட்சிக்காரர்கள் பேசுவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எங்கேயும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. என்றும் பெருமைப் படுகிறோம் என்று கூறினார்.