தமிழ்நாடு

பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்துள்ளது- துரை வைகோ

உதகையில் ஆளுநர் நடத்த இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு செய்தது சரியான முடிவு என துரை வைகோ கருத்து

 பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்துள்ளது- துரை வைகோ
துணைவேந்தர்கள் புறக்கணித்தது சரியானது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதிமுக முன்னாள் எம்.பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கண்டிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் உதகையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்த இருந்ததை தவறு என கருதி துணைவேந்தர்கள் புறக்கணித்தது சரியானது. ஆளுநர் வேந்தராக இருந்தாலும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. வன்முறையாளோ, தீவிரவாதத்தாலோ எதற்கும் ஒரு நிரந்தர தீர்வு காண முடியாது.

தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

காஷ்மீரில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அம்மாநில மக்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுவே அவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை வரவேற்கிறேன்.

பஹல்காமில் ஏற்கனவே கடந்த 2011ல் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதுள்ளதாக நான் கருதுகிறேன். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் தீவிரவாதத்திற்கு முற்றுப்பள்ளி வைக்க வேண்டும்.தீவிரவாத செயலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்தியாவிற்கு மட்டும் எதிரி கிடையாது மனிதநேயத்திற்கும் அவர்கள் எதிரி. வைகோ சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் 30 வருட காலமாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.
வைகோவின் குரல் தமிழக மக்களின் குரலாகவே பார்க்க வேண்டும். மீண்டும் தமிழக மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார். அதனை திமுக பரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.