தமிழ்நாடு

சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை

25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை

சென்னைக்குள் நுழைய 3 ரவுடிகளுக்கு தடை...காவல்துறை அதிரடி நடவடிக்கை
சட்ட நடவடிக்கையில் சிக்கல்

ரவுடிகளின் குற்றச்செயல்களை தடுக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரவுடிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகளை தொடர் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் குற்றவியல் நடைமுறை சட்டம் 109, 110 ஆகிய பிரிவுகளின் பதிவு செய்து 6 மாதங்கள் அவர்களது குற்றச்செயல்களை தடுப்பது வழக்கம். பிரமாண பத்திரத்தில் ரவுடி கையெழுத்திட்ட பிறகு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உடனே கைது செய்து சிறையில் அடைக்கவோ, ஒரு ஆண்டிற்கு ஜாமின் பெறவோ முடியாத நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வந்தது.

ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் தற்போது மாறி விட்டது. இதற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற புதிய சட்டம் அமலாகி உள்ளது. இதனால் அந்த சட்டங்கள் குறித்தும், அந்த சட்டங்களை நடைமுறைபடுத்துவதிலும் காவல்துறைக்கு சிக்கல் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் தான் ரவுடிகளின் மீதான சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

3 ரவுடிகளுக்கு தடை

இந்த நிலையில் தான் சென்னை காவல்துறை நகர காவல் சட்டத்தின் கீழ் 3 பிரபல ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓராண்டிற்கு சென்னை நகரத்திற்குள் வரக்கூடாது என்று தடை வித்துள்ளது. ஏ-ப்ளஸ் ரவுடிகளான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்த சூர்யா, நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின் ஆகியோர் மீது கொலை கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கிறது.

குறிப்பாக லெனின் மீது 6 கொலை வழக்குகளும், 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளார். நெடுங்குன்றம் சூர்யா என்பவர் 5 கொலை வழக்குகளிலும், 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 64 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். ராக்கெட் ராஜா என்பவர் 5 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளராக உள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகளாக காவல்துறையால் கூறப்படும் இவர்கள் மீது சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 (a) படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு சென்னைக்குள் இந்த மூன்று ரவுடிகளும் நுழையக்கூடாது என்று சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல்துறை அதிரடி

நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து ஏனைய பிற காரணங்களுக்காகவும் சென்னை எல்லைக்குள் மேற்கண்ட 3 ரவுடிகளும் வருவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சென்னை காவல்துறை முதல் முறையாக ரவுடிகள் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.சென்னை காவல் ஆணையத்திற்கான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நபரால் காவல் ஆணையரக பகுதியில் ஆபத்து பாதிப்பு ஏற்படுவதாக கருதினால் அந்த நபரை அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் ஆணையராக எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் சட்டத்தின் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் 3 ரவுடிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பாக மறைந்த ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் தான் வசிக்கும் பகுதியான மயிலாப்பூருக்குள் நுழைய காவல்துறை சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து தடை விதித்தது. இதேபோல மறைந்த பசுபதி பாண்டியனை தூத்துக்குடி மாவட்டத்திற்குள்ளும், ரவுடி ராக்கெட் ராஜாவை சொந்த ஊருக்குள்ளும் நுழைய தடை விதித்து நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.