தமிழ்நாடு

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!
ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!
சென்னை புதுப்பேட்டை சியாலி தெரு பகுதியில் வசித்து வருபவர் மொய்தீன் கபார். இவரது மகன் ரபீக் என்பவரை மூன்று பேர் நேற்று வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை எழும்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார். குறிப்பாக இரண்டு லட்ச ரூபாய் பணத்தை தர வேண்டும் எனவும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பணத்தைக் கொண்டு வரவில்லை என்றால், ரயிலின் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விடுவோம் என ரபீக்கை கடத்திய நபர்கள் செல்போன் மூலமாக அவரது தந்தை கபாரிடம் மிரட்டியதாக தெரிகிறது.

உடனடியாக சென்னை எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தனிப்படை போலீசார், கடத்திச் சென்றவர்கள் கூறியது போன்று, பணத்துடன் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ரபீக்கின் தந்தையை அழைத்துச் செல்வது போன்று நாடகம் ஆடினர். அங்கு சென்றவுடன் ரபீக்கை பிடித்து வைத்திருந்த மூன்று பேரையும் கையும் களவுமாக போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிறகு எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்தவரிடம், ரபீக் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் பண மோசடி விவகாரம் தொடர்பாக ரபீக்கிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும் அதை மீட்பதற்கு, கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் உதவி கேட்டது தெரிய வந்துள்ளது. கடத்தியவர்கள் மோசடி செய்த பணத்தோடு சேர்த்து மொத்தமாக 2 லட்சம் பணத்தை ரபீக்கின் தந்தையிடம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தனியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அப்சர் அலி (23), சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்த ராஜா (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ்குமார் (38) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதனையடுத்து ரபீக்கை கடத்தி பணத்தை வாங்கித் தருமாறு தஞ்சாவூரைச் சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரைப் பிடித்து விசாரித்தால் மட்டுமே ரபீக் எவ்வாறு பணத்தை மோசடி செய்தாரா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபீக் உண்மையில் பண மோசடி செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.