தமிழ்நாடு

பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!

தனியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த கும்பல் தங்க நகையை பறித்ததாக பொய் புகார் அளித்த நர்ஸை போலீசார் கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!
பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (21). தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் தாழம்பூர் காரணை பகுதியில் இருந்து ஒட்டியம்பாக்கம் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் இருசக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், தமிழ்ச் செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்து கொண்டு தப்பித்து விட்டனர்.

இது குறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் நடந்த இடம் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு கீழ் வருவதால் அங்கு கொடுக்கும் படி அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் நகைபறிப்பு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நர்ஸ் தமிழ்ச் செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பொய் புகார் அளித்துள்ளது தெரிந்தது. தங்க நகையினை தொலைத்துவிட்டு வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்பதால் நகைபறிப்பு சம்பவம் நடந்ததாக பொய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் தமிழ்ச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து எச்சரித்து நிலைய ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.