தமிழ்நாடு

ED சோதனையில் சிக்கிய புது ஆதாரங்கள்…போலி நிறுவனத்தை துவங்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிப்பு

டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ED சோதனையில் சிக்கிய புது ஆதாரங்கள்…போலி நிறுவனத்தை துவங்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிப்பு
வங்கியில் 30 கோடி ரூபாய் மோசடி

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சிக்கியவை என்னென்ன என்பது தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கியில் 30 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 30 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு தொடர்புடைய truedom மற்றும் tvh உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு பண பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடிக்கு அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் சிக்கியது

காற்றாலை ஆற்றல் அனுபவம் இல்லாத ஒரு போலியான நிறுவனத்தை உருவாக்கி, 100.8mw காற்றாலை திட்டம் என்ற போர்வையில் கடன் நிதியை திசை திருப்பதற்காக மட்டுமே இந்த நிறுவனத்தை உருவாக்கி பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சோதனையில் குற்றம் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் முக்கிய திருப்பமாக அமைச்சர் கே.என். நேருவின் துறையான தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், டெண்டர்களை முன்கூட்டியே ஒதுக்குவது தொடர்பாக தரகர்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் தொடர்புடையவர்களின் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், பணியிட மாறுதல் மற்றும் பதவி ஒதுக்கீடு செய்வதற்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், மிகப்பெரிய அளவிலான பரிமாற்றம் நடந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கமிஷன் தொகை

டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மாநில அளவில் மிகப்பெரிய அளவிலான அவள பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கிடைத்த பணம் மூலமாக வாங்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாகவும், இந்த வழக்கில் அது சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் விசாரணையில் குற்றம் தொடர்புடைய சொத்துக்கள் கண்டறியப்படும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.