தமிழ்நாடு

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!
Mother beaten to death over property dispute
சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர். தந்தையை ஏற்கனவே கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்ற நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமான தாக்குதலின் பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (64). இவரது மனைவி வெங்கடேஸ்வரி (54). இவர்களுக்கு வெற்றிச்செல்வன் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். வெற்றிச்செல்வன் சி.ஏ. படித்துவிட்டு சென்னையில் ஆடிட்டரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஆதிமூலம் சென்னையில் உள்ள தனது மற்றொரு வீட்டை விற்று பணம் தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என, வெற்றிச்செல்வன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 2023-ல், ஆதிமூலம் நடத்தி வந்த தையல் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன், மீண்டும் சொத்து கேட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது, பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், தனது தாயின் கண்முன்னே தந்தையை கத்தரிக்கோலால் 14 இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பயந்துபோன ஆதிமூலம் மற்றும் வெங்கடேஸ்வரி, திருப்பத்தூர் நகரில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர்.

தாயைக் கொன்ற மகன்

நேற்று இரவு வெற்றிச்செல்வன் தனது தாயைப் பார்க்க அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை பெரிதாவதைத் தவிர்க்க, ஆதிமூலம் அங்கிருந்து கசிநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட வெற்றிச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாயை மிரட்டியுள்ளார். பின்னர், ஒரு இரும்பு ராடால் வெங்கடேஸ்வரியின் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இன்று காலை வீட்டிற்கு வந்த ஆதிமூலம், மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அவரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவான வெற்றிச்செல்வனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக்காகத் தந்தையைக் கொல்ல முயன்றவர், தற்போது தாயைக் கொன்ற சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.