திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் மாட வீதியில் உள்ள கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்களில் ஏற்கனவே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீதமுள்ள திருவூடல் தெரு, தேரடிவீதி தெருக்களில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். மேலும், அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பிற்காக "Y" பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். அந்த வகையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு 20 சதவிகித வாக்கு சதவீதம் உள்ளது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, அவர் அவருடைய வியாபார நோக்கத்திற்காக சொல்லி இருப்பார் என்றும், இந்தியா டுடே என்ற பத்திரிகையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் திமுகவிற்கான வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் எ.வ.வேலு இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காவலர்களும், ஒரு ஆயுதம் ஏந்திய காவலரும் பாதுகாப்பு பணியில் விஜயை சுற்றி ஈடுபடுவார்கள். தமிழகத்திற்குள் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு பிரிவினர் உடன் பயணித்து பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றது. அந்த வகையில் Y,Z,Zplus என்று மூன்று பிரிவுகளின் கீழ் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதன்படி, அண்மையில் அரசியலில் இறங்கி உள்ள விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.