தமிழ்நாடு

கவின் ஆணவக்கொலை வழக்கு.. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கவின் ஆணவக்கொலை வழக்கு.. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Kavin's murder case adjourned to August 11th!
திருநெல்வேலியில் ஐ.டி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தம்பி சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கவின் கொலை வழக்கு பின்னணி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின், கடந்த ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர்களான அவரது தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் பாளையங்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஒரு காவலரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரோஜ், காவல் ஆய்வாளர் உலகராணி ஆகியோர், சுர்ஜித் மற்றும் சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு(வன் கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவலில் எடுக்க சுர்ஜித் மற்றும் அவரது தந்தை தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ. சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.