தமிழ்நாடு

கரூர் துயரம்: உயிரிழப்பு 41 ஆக உயர்வு; நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாகத் தீவிர விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கரூர் துயரம்: உயிரிழப்பு 41 ஆக உயர்வு; நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாகத் தீவிர விசாரணை!
Judge Aruna Jagatheesan conducts intensive investigation for the second day
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (செப். 27) கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தைப் பதிவு செய்துள்ளது.

விசாரணை ஆணையம் ஆய்வு

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் நேற்று (செப்.28) பிற்பகல் கரூரில் தனது விசாரணையைத் தொடங்கியது.

சம்பவ இடத்தில் இரண்டாவது நாள் விசாரணை

விசாரணையின் தொடர்ச்சியாக, இன்றும் இரண்டாவது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடமான வேலுசாமிபுரம் பகுதிக்கும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று அவர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளார். தற்போது, சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்களிடமும் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், விசாரணைக் குழுவினர் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. அசம்பாவித சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதி தற்போது போலீசாரின் தீவிர கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.