தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கரூர், வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு 4 பேர் ஆஜர்!
4 people appear for CBI investigation
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சாட்சியம் அளிப்பதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

வழக்கு பின்னணி

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை முதலில் தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநிலப் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் த.வெ.க.வினர் பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

சாட்சியங்கள் விசாரணை

வழக்கை விசாரிக்கும் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் (SP) முகேஷ் குமார், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்குச் சம்மன் அனுப்பியிருந்தார்.

வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அறிந்திருப்பவர்களிடம் சாட்சியங்கள் பெறும் நோக்கத்திற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு, சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பொதுமக்கள், ஒரு புகைப்படக் கலைஞர் (போட்டோகிராபர்), மற்றும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் என நான்கு பேர் இன்று ஆஜராகி உள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.