தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!
Lover murders girlfriend and flees
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் ஊராட்சி, கிறிஸ்துவ கண்டிகை கிராமத்தில், சௌந்தர்யா என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதலன் தினேஷ் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (27) மற்றும் சௌந்தர்யா (25) இருவரும் மேவளூர்குப்பம் கிராமத்தில் தனித் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் பெற்றோர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அண்மையில் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிலையில், சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் பேசிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தினேஷ், சௌந்தர்யாவை கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. நேற்று (ஜூலை 19) இரவு இந்த விவகாரம் தொடர்பாக சௌந்தர்யாவுக்கும், தினேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தினேஷ், சௌந்தர்யாவை அவர் குடியிருந்து வந்த அறைக்கு அழைத்துச் சென்று, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சௌந்தர்யாவுடன் தங்கியிருந்த சக தோழிகள் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்து, தினேஷ் குடியிருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு சௌந்தர்யா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சௌந்தர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சௌந்தர்யாவை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள தினேஷை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.