தமிழ்நாடு

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!
ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது
சென்னையில் 'ஹனி டிராப்' முறையில் தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி, மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிண்டி, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் முரளி (37), தனது கார்களை விற்பதற்காகச் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனைப் பார்த்த மோசடிக் கும்பலின் தலைவன் கார்த்திக், பூஜா ஸ்ரீ என்ற போலிப் பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, முரளியுடன் பெண்போலச் சாட் செய்து பழகியுள்ளார்.

முரளியைச் சந்திக்க ஆசை வார்த்தை கூறி வரவழைத்த கார்த்திக், தனது நண்பர்களான சுந்தரமூர்த்தி, பூபாலன் மற்றும் பெண் நண்பர் சினேகாவுடன் இணைந்து நாடகமாடியுள்ளார். முரளியைச் சினேகாவுடன் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, உல்லாசமாக இருப்பது போல் நாடகமாடியுள்ளனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த கார்த்திக், தான் சினேகாவின் கணவர் எனச் சண்டையிட்டு, முரளியைத் தாக்கி மிரட்டியுள்ளார்.

முரளியைக் கடத்தி மகாபலிபுரத்திற்குச் சென்ற கும்பல், அவரிடமிருந்து ₹1 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகைகள் மற்றும் ஐபோன் உள்ளிட்ட பொருட்களைப் பறித்துள்ளது. பின்னர், முரளியின் ஜி-பே (GPay) கணக்கிலிருந்து பணத்தையும் அபகரித்துள்ளனர்.

இந்த விவகாரம் பெண் சம்பந்தப்பட்டது என்பதால் முரளி புகார் அளிக்கமாட்டாரெனக் கும்பல் நினைத்துள்ளது. ஆனால், முரளி துணிச்சலாகப் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்த பணத்தில் ஈ.சி.ஆர். பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கார்த்திக், சுந்தரமூர்த்தி மற்றும் பூபாலன் ஆகியோர் உல்லாசமாக இருந்த நிலையில் சிக்கினர்.

விசாரணையில், வெறும் ₹3,000 கூலிக்காகச் சினேகாவை இந்த நாடகத்தில் நடிக்க அழைத்ததாகவும், ஆனால் சமூக வலைத்தளங்களில்பெண்போல்ல் பேசி ஏமாற்றியது தான் எனவும் கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மோசடி செய்த பணத்திலிருந்து சுந்தரமூர்த்தி பிள்ளையார் சதுர்த்திக்கு ₹10,000 நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பல்இது போன்றுறு எத்தனை போலி கணக்குகளைப் பயன்படுத்தி, எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, கார்த்திக், சுந்தரமூர்த்தி, பூபாலன் மற்றும் சினேகா ஆகிய நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.