தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!

ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!
சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது
ஆப்பிரிக்காவிலிருந்து விமானம்மூலம் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்தில், வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில், எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து இறங்கிய இரண்டு வட இந்தியப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து நேரடியாக டெல்லி அல்லது மும்பைக்குச் செல்லாமல், சென்னைக்கு வந்ததால் அவர்கள்மீது சந்தேகம் வலுத்தது.

விசாரணையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பாக்கெட்டுகளுக்குள் வெள்ளை நிறப் பவுடர் இருந்தது தெரியவந்தது. அந்தப் பவுடர்களை ரசாயனப் பரிசோதனை செய்ததில், அவை அதிக வீரியம் கொண்ட கொக்கைன் போதைப்பொருள் என்பது உறுதியானது.

சர்வதேச கடத்தல் கும்பல்: நைஜீரியர் தப்பி ஓட்டம்

கைது செய்யப்பட்ட இரண்டு பயணிகளும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குக் கூலிக்கு வேலை செய்வது தெரிய வந்தது. இந்தப் போதைப்பொருளை வாங்கிக் கொண்டு அவர்களுக்குப் பணம் கொடுக்க, நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடிப்பதற்குள், அவர் உள்நாட்டு விமானம்மூலம் டெல்லிக்குத் தப்பி ஓடிவிட்டார். எனினும், அவருடன் காத்திருந்த மும்பையைச் சேர்ந்த ஒருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரும் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மும்பைச் சேர்ந்த அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

தற்போது, டெல்லிக்குத் தப்பி ஓடிய நைஜீரியரைத் தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்துத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.