தமிழ்நாடு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!

கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!
Water inflow increases in Hogenakkal
காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து, தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான அருவிகள் மற்றும் நடைபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர் மழையால் நீர்வரத்து உயர்வு

அஞ்செட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று இரவு முதல் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று காலை நேரத்தில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு நேரத்தில் திடீரென அதிகரித்து 28 ஆயிரம் கன அடியாக மாறியது. இன்று (அக். 11) காலை 5 மணி நிலவரப்படி, நீர்வரத்து மேலும் அதிகரித்து 57 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

இந்த அதிக நீர்வரத்து காரணமாக, ஒகேனக்கல் மெயின் அருவிக்குச் செல்லக்கூடிய நடைபாதை நீரில் மூழ்கி தண்ணீர் செல்கிறது. மேலும், மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிச் செல்கிறது.

பாதுகாப்புக் கருதி, மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளில் மழை நீடிக்கும் பட்சத்தில், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.