தமிழ்நாடு

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!
விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!
சென்னையில் போதைப்பொருள் பொருட்கள் விற்பனையை கண்டறிந்து தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கையை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் விலை உயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, ஓஜி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குனர் ஸ்ரீபிரேம்குமார், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியர் அலெக்ஸ் சந்தோஷ், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கலெக்சன் ஏஜெண்டு ராஜன் ஆகியோரை கைது செய்தனர். அஸ்லாம், அகஸ்டின் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.

கைதான 3 பேரையும் ஏழுகிணறு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான ஓஜி கஞ்சா மற்றும் பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், உதவி இயக்குனரான பிரேமுக்கு தப்பி ஓடிய அஸ்லாம் பழக்கமானவர் என்றும், தற்போது அவர் மலேசியாவில் இருந்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அஸ்லாம் சொல்லும் இடத்திற்கு சென்று ஓஜி கஞ்சா வாங்கி வந்து, அதனை பதுக்கி வைப்பதை பிரேம் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இயக்குனர் பிரேம் தான் பதுக்கி வைத்த கஞ்சாவை தனது வாடகை வீட்டில் வைத்து சிறிய பொட்டலங்களாக போட்டு அஸ்லாம் சொல்பவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளளார். இதுவரை 5 முறை இதுபோன்று கஞ்சாவை வாங்கி வந்து அஸ்லாம் சொல்பவர்களுக்கு விற்றுள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், கால் சென்டர் ஊழியரான அலெக்ஸ் சந்தோஷின் நெருங்கிய நண்பர் தான் பிரேம்குமார். உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்றதற்கான கமிஷன் தொகையை வங்கி கணக்கில் கொண்டுவந்து விடுவதாக தெரிகிறது. அந்த பணத்தை ஏடிஎம் மூலம் அலெக்ஸ் சந்தோஷ் எடுத்து வந்து பிரேமிடம் கொடுத்து வந்துள்ளார். அதற்கு அவருக்கும் கமிஷன் கிடைத்ததுள்ளது.

பிரேம் தனது மற்றொரு நண்பரான ராஜாவின் மூலம் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து விற்பனை செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அண்ணா சாலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தபோது தான் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீ பிரேம்குமார், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "கோடியில் ஒருவன்" என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.