தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
Chief Minister announces relief
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருமகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, புண்ணியமூர்த்தி, ராமஜெயம், நாகபாண்டி மற்றும் வைரமணி ஆகிய 8 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை வரும் லிங்குசாமி, மணிகண்டன், கருப்பசாமி, முருகலட்சுமி மற்றும் அழகுராஜா ஆகிய 5 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.