தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கம..கம..விருந்து வைத்த இபிஎஸ்...புறக்கணித்த செங்கோட்டையன்

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கம..கம..விருந்து வைத்த இபிஎஸ்...புறக்கணித்த செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன்

இபிஎஸ் வைத்த விருந்து

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் விருந்து வைத்தார். அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு வாரத்திற்கு முன்பாகவே அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் எம்.எல்.ஏக்களுக்கு பிடித்தமான உணவு வகைகள் கேட்டறிந்து தயார் செய்யப்பட்டிருக்கிறது. கட்சி தலைமையின் உத்தரவால் மாலை முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் குவிந்தனர்.

புறக்கணித்த செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் ஆர்பிஉதயகுமார், தங்கமணி உள்ளிட்டோர் வரிசையாக அடுத்தடுத்து வருகை தந்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையிலும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் இந்த விருந்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎஸ் உடனான பனிப்போர் காரணமாக அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய விருந்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.

முன்னதாக 2026ல் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். மேலும் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்திருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்து முடிந்து கூட்டணி உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.