தமிழ்நாடு

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!
Chief Minister Stalin's demands to the Prime Minister
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர், மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல்களை கவனிப்பது மற்றும் கட்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்பியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை வழங்கினார். அதில், “2024-25-ஆம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள ரூ.2,151.59 கோடியையும் - 2025-26-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்க வேண்டும். PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் விடுவிக்கவும்.

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படாமல் உள்ள திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி, அத்திப்பட்டு -புத்தூர், மாமல்லபுரம் வழியாக சென்னை கடலூர் ஆகிய இரயில் பாதைத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

திருவனந்தபுரம் - குமரி இரட்டைப் பாதைப் பணியினைத் துரிதப்படுத்தவும், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். கோவை - பல்லடம் - கரூர், கோவை - கோபி - பவானி - சேலம், மதுரை- மேலூர் - துவரங்குறிச்சி - விராலிமலை -இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றிப் புறநகர் இரயில் ஆகிய திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு செய்ய DPR-க்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சென்னைப் புறநகர் இரயில் சேவைகளின் இடைவெளி நேரத்தை குறைக்கவும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 4-வது வழித்தடம் மற்றும் ஆவடி - திருப்பெரும்புதூர் இரயில் பாதையை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு

இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது.
இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சேலம் பாதுகாப்பு தொழில் பூங்கா

1971-1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைப்பதற்காக 3973.08 ஏக்கர் நிலங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் 1503.44 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
சேலம் உருக்காலையில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தைப் பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலையின்கீழ் சேலத்தில் பாதுகாப்புத் தொழில் தொகுப்பினை நிறுவ அரசு ஆர்வமாக உள்ளது. இதற்கு ஏதுவாக பிரதமர் தலையிட்டு, நிலத்தைத் திருப்பி வழங்க ஆவன செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.