தமிழ்நாடு

எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என கூறி முதியவரிடம் அராஜகம்...திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

 எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என கூறி முதியவரிடம் அராஜகம்...திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
திமுக நிர்வாகிகளால் ஜேசிபி மூலம் இடிக்கப்பட்ட முதியவரின் சட்டர்
முதியவருக்கு மிரட்டல்

சென்னை வடபழனி குமரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் 73 வயது முதியவர் பால்துரை. இவர் அதே பகுதியில் 2003ஆம் ஆண்டியிலிருந்து 1800 சதுர அடி கொண்ட காலி இடத்தை ஜனார்த்தனன் என்பவரிடம் இருந்து லீசுக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் லீசுக்கு எடுத்துள்ள இடத்தை திமுக எம்.எல்.ஏ பிரபாகராஜாவுடன் ஆதரவாளர்கள் என கூறி கொண்டு சிலர் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

மேலும், சூரிய சிவக்குமார், சீனிவாசன் உட்பட 30 பேர் கடந்த இரண்டு வருடமாக தாங்கள் தான் இடத்தின் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டும், இடத்தை காலி செய்யுமாறு மிரட்டி வருவதாக தெரிகிது. இந்நிலையில் நேற்று முன்தினம் சூரிய சிவக்குமார், சீனிவாசன் மற்றும் 30 பேருடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வந்து இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் சட்டரை இடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பால்துரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் வழக்குப்பதிவு

மேலும் பாதிக்கப்பட்ட பால்துரையின் மகன் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், சூரிய சிவக்குமார் திமுகவின் 129 (அ) வட்ட செயலாளராகவும், சீனிவாசன் திமுக விருகை பகுதியின் பிரதிநிதி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சூரிய சிவக்குமார், சீனிவாசன் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக திட்டுதல், சொத்தை மிரட்டி பறிக்க முயற்சி செய்தல், சொத்தின் உரிமையாளருக்கு அல்லது சொத்தில் குடியிருப்பவருக்கு சேதத்தை விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.