தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் மது விற்பனை அமோகம்.. கல்லா கட்டிய டாஸ்மாக்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் மது விற்பனை அமோகம்.. கல்லா கட்டிய டாஸ்மாக்!
TASMAC Sales
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை எதிர்பார்த்த இலக்கையும் தாண்டிச் சாதனை அளவாக மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

விற்பனை நிலவரமும் இலக்கும்

தமிழகம் முழுவதும் சுமார் 4,829 டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைந்த 3,240 பார்களும் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் இந்தக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை உயரும். பண்டிகைக் காலங்களில் இந்த விற்பனை வழக்கம் போல் 15 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ரூ.600 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று நாட்களில் நடந்த விற்பனையானது இந்த இலக்கை வெகுவாகத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது.

நாள்வாரியான விவரம்

தீபாவளியை முன்னிட்டு நடந்த மூன்று நாட்கள் விற்பனை விவரம் பின்வருமாறு;

கடந்த 18ஆம் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 19ஆம் தேதி விற்பனை அதிகரித்து ரூ.293 கோடியே 73 லட்சத்தை எட்டியது. தீபாவளிப் பண்டிகை நாளான நேற்று (அக்டோபர் 20) ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது.

இந்த மூன்று நாட்களின் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.789 கோடியே 85 லட்சமாகும். இது டாஸ்மாக் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மண்டலவாரியான அதிகபட்ச விற்பனை

மாநிலத்தின் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்ற விற்பனையில், மதுரை மண்டலம் அதிகபட்ச விற்பனையைச் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சமும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.