தமிழ்நாடு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான 3 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஆடு வியாபாரியை அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான 3 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
Coimbatore college student sexual abuse case
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் உட்பட மூன்று பேர், அதே நாளில் (நவம்பர் 2) காலையில் சேரப்பாளையம் அருகே ஒருவரை அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கும் கைது நடவடிக்கையும்

கடந்த மாதம் நவம்பர் 2-ம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, சிவகங்கையைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ் (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (28), மற்றும் அவர்களது உறவினரான தவசி என்ற குணா ஆகிய மூவரும் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மறுநாள் (நவம்பர் 3) துடியலூர் அருகே தப்பி ஓட முயன்ற மூவரையும் தனிப்படை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு மூவரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்றே நடந்த கொலைச் சம்பவம்

அந்த மூன்று குற்றவாளிகளிடம் போலீஸ் காவலில் நடத்திய விசாரணையில், அதே நாள் நவம்பர் 2 ஆம் தேதி காலையில் சேரப்பாளையம் அருகே நடந்த தேவராஜ் (55) கொலைச் சம்பவத்திற்கும் இவர்களே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதுரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரியான தேவராஜ், நவம்பர் 2-ம் தேதி திடீரென மாயமானார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் தேடியபோது, தேவராஜ் தலையில் பலத்த காயங்களுடன் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலைக்கான பின்னணி மற்றும் வாக்குமூலம்

மாணவியின் புகாரைத் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் தான் தேவராஜை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. நவம்பர் 2-ம் தேதி காலையில், மூவரும் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் நீண்ட நேரம் மது அருந்திக் கொண்டு அமர்ந்துள்ளனர். அப்போது ஆடு வியாபாரியான தேவராஜ் அவர்களைப் பார்த்து, "ஏன் இங்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மூவரும் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்து விழுந்த அவர் உயிரிழந்துள்ளார். அதன் பிறகே, அங்கு இருந்து இரவில் கோவை விமான நிலையம் அருகே வந்து மது அருந்திய நிலையில், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை

தேவராஜ் கொலை வழக்குத் தொடர்பாகக் கோவில்பாளையம் போலீசார் மூவரையும் விசாரிக்க உள்ளனர். இதற்காக, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர். மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர், அன்றைய தினமே காலையில் ஒரு கொலை செய்துவிட்டு, இரவில் மற்றொரு கொடூரச் சம்பவத்தையும் நிகழ்த்தியிருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.