தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைக்குடா வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
மழைக்கு வாய்ப்பு
இதன்காரணமாக, இன்று முதல் 21 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல், வரும் 22 மற்றும் 23 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
17-04-2026 முதல் 19-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் படிப்படியாக உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
20-04-2026 மற்றும் 21-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









