தமிழ்நாடு

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!
முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!
கோவை மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் முன்னிலையில் அவர் பேசினார்.

ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய சேவைகள்

ரயில் நிலைய விரிவாக்கம்: கோவை மத்திய ரயில் நிலைய விரிவாக்கத்திற்கான நிலங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சரக்கு முனையம் (Goods Shed) பீளமேடு, சிங்காநல்லூர் அல்லது இருகூர் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட உள்ளது.

வடகோவை மற்றும் போத்தனூர்: வடகோவை ரயில் நிலையப் பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கும், வடகோவை ரயில் நிலையத்திலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கூடுதல் ரயில் சேவைகள்:

வேளாங்கண்ணி, தூத்துக்குடி, மற்றும் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குக் கோவையிலிருந்து நேரடி ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருக்கு இரவு நேர ரயில் சேவையையும் கேட்டிருப்பதாக அவர் கூறினார்.

மெட்ரோ பணிகள் மற்றும் விமான நிலைய விரிவாக்கம்

மெட்ரோ ரயில் திட்டம்:

உக்கடம் முதல் நீலம்பூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான சர்வே பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெக்ஸ்டூல் பாலம் முதல் கணபதி சூர்யா மருத்துவமனை வரையிலான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலைய விரிவாக்கம்:

விமான நிலைய விரிவாக்கத்திற்காக மாநில அரசு ஏற்கனவே நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால், மத்திய அரசின் காலதாமதத்தால் பணிகள் மந்தமாகவே உள்ளன. சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன.

விமான நிலைய விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்படும் என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார். விமான நிலையப் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற மாநகராட்சிமூலம் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.