தமிழ்நாடு

விதிகளை மீறினாரா? மருத்துவர் பாலாஜி மீது மருத்துவ கவுன்சிலில் புகார்..!

மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறினாரா? மருத்துவர் பாலாஜி  மீது மருத்துவ கவுன்சிலில் புகார்..!
விதிகளை மீறினாரா? மருத்துவர் பாலாஜி மீது மருத்துவ கவுன்சிலில் புகார்..!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் தாக்கப்பட்டதை தொடர்ந்து,  மருத்துவ விதிகளை மீறி இருப்பதாக மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  கடந்த நவம்பர் 13 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் முதல் தளத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவ துறை தலைவர் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கழுத்து, முதுகு, தோள்பட்டை என ஏழு இடங்களில் கத்தியால் குத்தினார். தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், தற்போது அவர் குணமடைந்து வருகிறார். 

இந்நிலையில், மருத்துவர் பாலாஜி மீது மருத்துவ கவுன்சிலில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் நிபந்தனைகளை மீறி அரசு மருத்துவரான பாலாஜி தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது எப்படி.? அரசு பணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் ஏதேனும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாரா? என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ஏதேனும் பரிந்துரைத்துள்ளாரா? என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் நிபந்தனைகளை மீறி இருப்பதாக மருத்துவர் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வெல்ஃபேர் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் ம.முகமது கவுஸ் என்பவர் மின்னஞ்சல் மூலம் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.