தமிழ்நாடு

சென்னையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய திமுக பிரமுகர் கைது!

சென்னையில் முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய திமுக பிரமுகர் கைது!
பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டி
சென்னை திருமங்கலம் டிவி நகர் பகுதியில், முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, திமுக பிரமுகர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தப்பி ஓடிய திமுக பிரமுகரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

சென்னை திருமங்கலம் டிவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (47). இவர் பா.ஜ.க.வில் நெசவாளர் அணி மாவட்டத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்குப் பக்கத்து வீட்டில் தி.மு.க. பிரமுகர் ஆறுமுகம் (49) என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம், மணிகண்டன் வீட்டுப் பக்கத்தில் உள்ள அரசு நிலத்தை அபகரித்து, அதற்குப் பட்டா மாற்றம் செய்ததுடன், அங்குள்ள மரங்களை வெட்டிவிட்டுச் சுற்றுச்சுவர் எழுப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, மணிகண்டன் இதனைத் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

புகார் மற்றும் கோபம்

இதையடுத்து, அரசு நிலத்தை அபகரிக்க முயன்றது குறித்து பா.ஜ.க. நிர்வாகி மணிகண்டன், தி.மு.க. பிரமுகர் ஆறுமுகம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், மணிகண்டன் புகார் அளித்ததால் அவர் மீது ஆறுமுகம் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் மணிகண்டனிடம் அடிக்கடி வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வீட்டு வாசலில் வெறிச்செயல்

இந்நிலையில், இன்று காலை மணிகண்டன் தனது வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் சிலைக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறுமுகம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனைச் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார். உடனே மணிகண்டனின் உறவினர்கள் ஓடி வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைக் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆறுமுகம் தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

போலீசார் நடவடிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அரசு நிலத்தை அபகரிக்க முயன்ற ஆறுமுகம் மீது மணிகண்டன் தொடர்ந்து புகார் அளித்து வந்ததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு ஆறுமுகம் இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, தப்பி ஓடிய ஆறுமுகத்தைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவான மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.