தமிழ்நாடு

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!
மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!
சென்னை முகப்பேரில் உள்ள கனகராஜ் என்பவரின் வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம் என்பவர் வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் மூன்றாம் நபருக்கு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அளித்த புகாரில் நொளம்பூர் காவல்துறை வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் ஜாமின் கோரி ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இது போன்ற மோசடிகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் எஸ். சந்தோஷ் ஆஜராகி, தமிழக டிஜிபி தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இது போன்ற புகார்களை சிவில் வழக்காக பதிவு செய்யாமல் உடனடியாக மோசடி வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மோசடியை தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும் உயர் மட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மோசடியை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வீடியோவை பார்வையிட்ட நீதிபதி,உரிய நடவடிக்கைகள் எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், மற்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தார். விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு இது போன்ற மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.