தமிழ்நாடு

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.. பிரபல ரவுடி சுட்டுக்கொலை.. என்கவுன்டர் நடந்தது எப்படி?

பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.. பிரபல ரவுடி சுட்டுக்கொலை.. என்கவுன்டர் நடந்தது எப்படி?
Famous rowdy shot dead
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியை போலீஸ் காவலில் இருந்தபோது கொல்ல முயன்ற வழக்கில், முக்கியக் குற்றவாளியான ரவுடி அழகு ராஜா என்ற கொட்டு ராஜா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்ப முயன்ற ரவுடி மீண்டும் வெடிகுண்டு வீசியதால், தற்காப்பிற்காக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சிறை மாற்றத்தின் போது நடந்த பயங்கரம்

கடந்த 24-ஆம் தேதி, பிரபல ரவுடி வெள்ளைக் காளியைப் போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக போலீஸ் வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, அங்கு பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், வெள்ளைக் காளியையும் அங்கிருந்த போலீசாரையும் குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெரம்பலூர் போலீசார் தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது தாக்குதல்

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த அழகு ராஜாவை (30) மங்களமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் மீதமுள்ள நாட்டு வெடிகுண்டுகளைத் திருமாந்துறை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அழகு ராஜாவை இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

என்கவுன்டர் நடந்தது எப்படி?

காட்டுப்பகுதிக்குச் சென்றபோது, மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை எடுத்த அழகு ராஜா, திடீரென போலீஸ் வாகனத்தின் மீது வீசினார். மேலும், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் நந்தகுமார், தற்காப்பிற்காகத் தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகு ராஜா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அழகு ராஜா மரணம்

காயமடைந்த அழகு ராஜாவைப் போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த மோதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கர், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றப் பின்னணி மற்றும் விசாரணை

சுட்டுக்கொல்லப்பட்ட அழகு ராஜா மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெள்ளைக் காளியைக் கொல்லும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து வீசியதில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது என்கவுண்டர் நடந்துள்ளதால், விதிமுறைப்படி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற ரவுடிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.