தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை
திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பே நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை நகரில் அதுவும் காவல் நிலையம் அருகில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம்மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, நாம் தமிழரின் சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலைக்கு பின்னணியில் யார் உள்ளனர், ஆயுதங்கள் கொண்டு வந்தது எப்படி ஸ்கெட்ச் போட்டது எப்படி என பல கோணங்களில் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக போலீசார் திருவேங்கடத்தை தீவிரமாக தேடிய போது புகழ் பகுதியில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தகர கொட்டாயில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது எடுத்து காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

இதனால், தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் இரண்டு முறை சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த திருவேங்கடத்தை உடனடியாக போலீசார் மாதவரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்த போது, வரும் வழியிலேயே திருவேங்கடம் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.