தமிழ்நாடு

நலிவடையும் விசைத்தறி தொழில்.. பாதுகாக்க தனி வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்!

விசைத்தறி தொழில் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நலிவடையும் விசைத்தறி தொழில்..  பாதுகாக்க தனி வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்!
விசைத்தறி தொழில் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் விசைத்தறி தொழில் நிறைந்த நகரப் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள விசைத்தறியாளர்கள் இணைந்து கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் என கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர். கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க 53வது ஆண்டுவிழா மகாசபை கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தலைவராக சங்கமேஸ்வரன் செயலராக சுந்தர்ராஜன், பொருளராக ராஜேந்திரன், உள்ளிட்ட பத்து நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற மகாசபை கூட்டத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் விசைத்தறிக்கு சரியான ரகங்கள் இல்லை. நூலுக்கு நிலையான விலை இல்லை. இதனால் ஜவுளி ஏற்றுமதி செய்வதில் பாதிப்புள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தருவது விசைத்தறி ஜவுளி தொழில். மின்சார கட்டண உயர்வு. நூல் விலை உயர்வு ஆகியவற்றால் விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. தமிழக அரசு முன்வந்து, விசைத்தறி தொழிலுக்கு சோலார் அமைத்து, விசைத்தறி ஜவுளி தொழில் காக்க வேண்டும். ரக ஒதுக்கீடு என்று சொல்லி, அடிக்கடி அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுத்து வருவதால், எந்த ரகமும் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனை நம்பி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ், ஆயில், பாவு ஓட்டுதல், அச்சு பினைத்தல், ஒடி எடுத்தல் என சார்பு தொழில்கள் உள்ளன. விசைத்தறியில் ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டியது எந்த ரகம் என்பதை தெளிவு படுத்திட வேண்டும். சில ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்து கைத்தறி ரகங்கள் என ஏமாற்றி பலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கஷ்டங்களுக்கு இடையில்தான் விசைத்தறி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வங்கி கடனுதவி கொடுத்து விசைத்தறி தொழில் மேம்பட அரசு உதவ வேண்டும். விசைத்தறி தொழில் மேம்பட, தனி வாரியம் அமைக்க வேண்டும், அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி, விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருவதால், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.