தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்..அரசியல் தலைவர்களை சந்திக்க போராட்டக்குழு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

 பரந்தூர் விமான நிலையத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்..அரசியல் தலைவர்களை சந்திக்க போராட்டக்குழு முடிவு!
பரந்தூர் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து பத்திரப்பதிவு!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான பத்திர பதிவு தொடங்கியுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் ஜூன் 25-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆயிரம் நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து சுமார் 17 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் தங்களது போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள போராட்டக்குழு, வரும் 14ந் தேதி சென்னையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளது.
.
இதற்கு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அக்குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை கைவிடுமாறு 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்நிலையில், பரந்தூர் மக்களிடம் ஆலோசிக்காமலும், முறையான ஆய்வுகள் நடத்தாமலும், வேளாண் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டுக்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

என்ன செய்தாலும் பரந்தூர் விவசாயிகள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் ஆட்களை அழைத்துவந்து, அவர்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து வருகிறது. விவசாயிகள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழக அரசின் இந்த ஜனநாயக படுகொலை செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையுடன் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சட்டப் போராட்டத்துக்கான முன்னெடுப்பு சில நாட்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.