தமிழ்நாடு

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி.. பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்!

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி.. பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், பூங்காவில் கண்களை கவரும் வகையில், வித விதமாக பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏப்ரல் 15 முதல் ஜீன் 15ஆம் தேதி வரை கோடை சீசன் நடைபெறுவது வழக்கம், மேலும் கொடைக்கானலில் நிலவும் கால நிலையை அனுபவிக்க இந்த மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் அடுத்த மாதம் மலர் கண்காட்சி துவங்க உள்ளது.

இந்நிலையில் மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக 3 கட்டமாக வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான நாற்றுகள் வரவழைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 62-வது மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் நடவு செய்யப்பட்ட பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. குறிப்பாக சால்வியா,பேன்சி,கேலண்டுள்ளா,பிங் ஆஸ்டர், லில்லியம், டேலியா, பாப்பி, டையந்தாஸ், ஆண்டிரினியம் உள்ளிட்ட பூக்கள் பல்வேறு வண்ணங்களில்,பலவகைகளில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.

இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தற்போது பூக்க துவங்கியுள்ள மலர்களை ஆர்வத்துடன் ரசிப்பதுடன்,செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான பல்வேறு பூக்கள் பூக்க இருப்பதாகவும், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.