தமிழ்நாடு

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி...தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி...தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை
கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் 57 வயது நபர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நேற்று பாலக்காட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

நிபா வைரஸ் பாதிப்பு

இதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கேரள மாநில சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக காரமடையை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லை பகுதிகளான பட்டிசாலை, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்(பொறுப்பு) சியாமளா மேற்பார்வையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

காய்ச்சல் பரிசோதனை

இந்த இரு குழுக்களும் பட்டி சாலை, முள்ளி சோதனைச்சாவடிகளில் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உள்ளே வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அவ்வாறு வரும் நபர்களுக்கு உடல் வெப்பமானி மூலமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காய்ச்சல் இருப்பின் அவர்களது பெயர், ஊர், தொடர்பு எண் செல்லும் இடம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.தொடர்ந்து மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையினர் ஆய்வு

இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர்(பொறுப்பு) சியாமளா கூறுகையில் " அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் பலியானதை தொடர்ந்து தமிழக - கேரள எல்லை பகுதிகளில் உள்ள முள்ளி,பட்டி சாலை ஆகிய சோதனைச்சாவடிகளில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர்,இரு மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் என மூவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மக்களிடம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

காய்ச்சல் இருப்பின் அவர்களது பெயர்,ஊர்,விலாசம்,தொடர்பு எண்,செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களை தினமும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் அச்சப்பட வேண்டாம்

கடந்த மூன்று தினங்களாக தமிழக - கேரளா எல்லை பகுதியில் உள்ள முள்ளி,பட்டி சாலை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளோம்.எனினும் இதுவரை காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.மக்கள் அச்சப்பட வேண்டாம். மேலும், இவ்விரு சோதனைச்சாவடிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர் " என தெரிவித்தார்.