விளையாட்டு

விம்பிள்டன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னர்

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

விம்பிள்டன்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சின்னர்
Jannik Sinner has defeated Novak Djokovic in the Wimbledon semifinals
2025 ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த ஜூன் 30 ஆம் தேதி திங்கட்கிழமையன்று தொடங்கியது. பல்வேறு அதிரடியான திருப்பங்களுடன் நடைப்பெற்று வந்த விம்பிள்டன் போட்டியின் அரையிறுதிக்கு சின்னர், ஜோகோவிச், கார்லோஸ் அல்கராசு, டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் முன்னேறினர்.

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைப்பெற்ற முதல் அரையிறுதி போட்டியில், கார்லோஸ் அல்கராசு- 6-4, 5-7, 6-3, 7-6(6) என்கிற செட் கணக்கில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டி:

மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசை டென்னிஸில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், மற்றொரு பலம் வாய்ந்த நோவக் ஜோகோவிச்சை எதிர்க்கொண்டார். பரப்பரப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் சின்னர், ஜோகோவிச்சை நேரடி செட்களில் (6-3, 6-3, 6-4) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச்சுக்கு எதிரான வெற்றியின் மூலம், 4-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார் சின்னர். முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சின்னர்.

ஜோகோவிச் தோல்வியடைந்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெறத் தவறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜோகோவிச் தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.

சின்னர் vs கார்லோஸ் அல்கராசு:

கார்லோஸ் அல்கராசு- சின்னர் இடையேயான இறுதிப்போட்டி நாளை நடைப்பெற உள்ளது. அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற நடப்பு சாம்பியனான சின்னர், பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தன்னைத் தோற்கடித்த அல்கராசை பழிவாங்கும் நோக்குடன் களமிறங்குவார் என்பதால் போட்டி அனல் பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விம்பிள்டன் பட்டங்களை அல்கராஸ் வென்றுள்ள நிலையில், இந்தாண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். சின்னர், அல்கராசு இடையே இதுவரை 12 போட்டிகள் நடைப்பெற்றுள்ளது. இதில் 8-4 என்ற கணக்கில் அல்கராசு ஆதிக்கம் செலுத்துகிறார்.