ஆன்மிகம்

கபாலிபாறை: கணவன்- மனைவி ஒற்றுமை வளர்க்கும் கபாலீஸ்வரர்!

தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி கபாலிபாறை, கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இக்கோயில் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

கபாலிபாறை: கணவன்- மனைவி ஒற்றுமை வளர்க்கும் கபாலீஸ்வரர்!
Kapaliparai Kapaleeswarar Temple
பஞ்சபூதங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளவன் பரம்பொருளாகிய ஈசன். அவன் அருள்பாலிக்கிற தலங்கள் ஒவ்வொன்றும் பக்தர்களின் ஏதோ ஒரு கவலைக்கு மருந்தளிக்கும் விதமாய் தனித்துவம் கொண்டிருக்கும். அந்த வகையில் தம்பதியர் இடையேயான பிரச்னைகளைத் தீர்த்துவைத்து, குடும்பத்தில் ஒற்றுமை நிலவச் செய்யும் தலமாகத் திகழ்கிறது, கபாலி பாறை.

கபாலீஸ்வரருக்கு கோயில்:

பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் முள்ளிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்த பழம்பெருமை மிக்க ஊர் கபாலி பாறை. நாலாபக்கமும் கடல்போல் நீர் சூழ்ந்து நடுவே சிறு தீவு போல் ரம்மியமாய் அமைந்துள்ளது இவ்வூர்.

ஊர்வளைஞ்சாங்குளம் என்கிற ஏரி போன்ற குளத்திற்குள் ஊரும், குளக்கரையின் தென்புறம் பெரிய குன்றும் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறையில் நாலுகால் மண்டபத்தை அமைத்து, அதில் ஆவுடையுடன் கூடிய லிங்கேஸ்வரரை நிறுவி மக்கள் வழிபட்டனர். இறைவன், கபாலீஸ்வரர்.

புராதன காலம்தொட்டு இங்கே இறைவன் அருள்பாலிக்கும் காரணத்தால், அந்தப் பாறைக்கு கபாலி பாறை என்கிற காரணப்பெயர் ஏற்பட்டது. அதுவே விவசாய மக்களின் வழிபாட்டுத்தலமாகவும் ஊரின் தனித்துவமான அடையாளமாகவும் இருக்கும் காரணத்தால், இவ்வூருக்கு அதற்கு முன் இருந்த பெயர் மாறி, தற்போது கபாலி பாறை என்ற பெயரே இருந்து வருகிறது.

ஒருகட்டத்தில், நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த ஈசனுக்கு ஊருக்குள் ஒரு கோயிலைக் கட்ட பக்தர்கள் விருப்பம் கொண்டனர். அதனால், மீனாட்சியம்மன் உடனுறை கபாலீஸ்வரருக்கு பாண்டிய நாட்டு கலைப்பாணியில் ஓர் அழகிய கலைக்கோயில் கிழக்குப் பார்த்தவண்ணம் கட்டப்பட்டது. இவளையும் வணங்கினால், குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிப்பதாகச் சொல்கிறார்கள் பலன்பெற்ற பக்தர்கள்.

மீனாட்சி மடம்:

கோயிலின் கிழக்குப் பக்கம் வருஷம் முழுவதும் நீர் நிரம்பிக் கிடப்பதால் வழிபாட்டுக்கு ஏதுவாக தெற்குப்பக்கம் பிரதான வாசலைக் கட்டினர். நாலாபுறமும் உயர்ந்த திருமதிலும், சாலக்கோபுர வாசலும் கொண்டு ஊரின் நடுநாயகமாக கோயில் அமைந்துள்ளது.

பிரதான வாசல் தாண்டியதும் கிழக்குச் சுற்றில் நந்திதேவர் மண்டபமும் தலவிருட்சமாக வில்வமரமும் உள்ளன. பிரதான கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்கிற கட்டமைப்பில் அமைந்துள்ளது.

மகாமண்டப வடபுறம் தெற்குப் பார்த்த வண்ணம், தன்னை நாடிவரும் அடியார்களுக்கு வேண்டியது வேண்டியவண்ணம் வரமளித்துக் காக்கும் கருணாம்பிகையாக அன்னை மீனாட்சி, இரு கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தியுள்ளாள். பூவின் மேல் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. இடது கையைத் தொங்கவிட்டபடி அம்பாள் காண்பவரின் கண்ணையும், கருத்தையும் கவரும்வண்ணம் காட்சியளிக்கிறாள்.

கோயில் கட்டப்பட்ட காலம் தொட்டு நீண்ட காலம் இந்த ஆலயத்தை மக்கள் மீனாட்சி மடம் என்றே அழைத்து வந்தனர். காரணம், ஆலயம் ஊரை விட்டுத் தனியாய் குளக்கரையில் இருந்ததாலும், வழிப்போக்கர்கள், யாத்ரிகர்கள் பலரும் இளைப்பாறி, நீராடிச் செல்ல இக்கோயிலில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான்.

தம்பதியினர் இடையே ஒற்றுமை வேண்டி வழிபாடு:

அர்த்த மண்டபத்தில் பிரதோஷ நந்தியும், கருவறை வாசலில் அனுக்ஞை விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறை மூலவராக, சாந்நித்தியமிக்க தெய்வமாக அருள்மிகு கபாலீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் இடர்கள் நீங்கி, வாழ்வு இன்பமயமாகும் என்பது நம்பிக்கை. தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி இத்தலத்தில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமத்தினர் பலரும் தங்கள் வீட்டு சுபகாரியங்களை இத்தலத்தில் தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. உள்சுற்றில் கன்னிமூலை கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் உள்ளன.

மற்ற கோயில்களில் காணப்படாத ஒரு வித்தியாசமான கட்டுமான அமைப்பு இந்தக் கோயிலில் காணப்படுவது தனித்துவமாக உள்ளன. அதாவது, பிரதான கோயில் கட்டி முடித்த பின்னர் உயர்ந்த திருமதில் கட்டும்போது பரிவார தேவதை சன்னதிகளை குடைவரை அமைப்பில் திட்டமிட்டு எழிலாகக் கட்டி வைத்துள்ளனர். இந்த வித்தியாசமான கட்டுமானத்தை இத்தலத்தில் மட்டுமே நம்மால் பார்க்கமுடிகிறது. வடக்குச் சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், கிழக்கு திருமதில் கலைநயமிக்க கல்சாளரம் ஒன்றும் காணப்படுகிறது. கிழக்குத் திருமதிலின் வெளிப்பக்கம் கருவறை கல் சாளரத்தைப் பார்த்த வண்ணம் தீப ஸ்தம்பம் மற்றும் ஆதி நந்தி சிற்பமும் உள்ளன.

கி.பி. 14ம் நூற்றாண்டில் அந்நியர்கள் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து நமது கோயில்களைக் கொள்ளையடித்தும், பெருமளவு சேதப்படுத்தியும் பலவாறு அட்டூழியங்கள் செய்தனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட கோயில்களில் கபாலிப்பாறை கோயிலும் ஒன்றாக இருந்தது. சிவனடியார்களின் பெருமுயற்சியால் சேதமான நந்தி விக்ரகத்தை வெளிச்சுற்றில் வைத்துவிட்டு உள்சுற்றில் புதிய நந்தி தேவரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

கோயில் எங்கே உள்ளது?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 11.05.2025 அன்று, மங்களகரமாக மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. தினசரி இரு கால பூஜை நடைபெறுகிறது. பிரதோஷம், அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகாதீபம், மார்கழி 30 நாட்கள், திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம், திருவாதிரை ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

வாழ்வில் எல்லாவிதமான செல்வ வளமும், குறைவிலா உடல்நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட நீங்களும் குடும்பத்தோடு ஒருமுறை இத்திருத்தலம் சென்று தரிசித்து வரலாமே!

எங்கே இருக்கு?

திருநெல்வேலி - கடையம் (வழி முக்கூடல்) தடம் எண் 129, 130 ஆகிய பேருந்துகளில் 25 கி.மீ. பயணித்தால் கபாலி பாறை திருத்தலம் வந்தடையலாம். தரிசன நேரம்: காலை 7 - பகல் 10.30; மாலை 5.30 - இரவு 7.30.

(கட்டுரையாளர்: வெ. கணேசன்/ பக்தி / 17-7-2025)