இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து ரிப்போர்ட்: திடீரென்று ‘கட்ஆஃப்’ ஆன என்ஜின் எரிபொருள்!

உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து ரிப்போர்ட்: திடீரென்று ‘கட்ஆஃப்’ ஆன என்ஜின் எரிபொருள்!
Air India Disaster: Preliminary Report Reveals Engines Were Switched Off
அகமதாபாத்-லண்டன் விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணமாக அறிக்கையின் மூலம் கூறப்படுகிறது.

260 பேர் உயிரிழப்பு:

கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் விமானம் கட்டிடத்தில் மோதியதன் விளைவாக 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, இரு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் "ரன்" (இயங்கும்) நிலையில் இருந்து "கட்ஆஃப்" (நிறுத்தும்) நிலைக்கு மாற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

--> விமானம் புறப்பட்ட உடனேயே, ஒரு நொடிக்குள் இரு என்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகளும் "கட்ஆஃப்" நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் உடனடியாக என்ஜின்களின் உந்துவிசை (thrust) இழக்கப்பட்டது.

--> விமானத்தின் காக்பிட் குரல் பதிவுகளில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் "ஏன் எரிபொருளை கட் ஆப் செய்தீர்கள்?" என்று கேட்பதும், அதற்கு மற்றொரு விமானி "நான் அப்படி செய்யவில்லை" என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது.

--> எரிபொருள் சுவிட்சுகள் "கட்ஆஃப்" ஆன சிறிது நேரத்திலேயே, என்ஜின்களை மறுதொடக்கம் செய்யும் முயற்சியாக மீண்டும் "ரன்" நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், விமானம் மிகக் குறைந்த உயரத்தில் இருந்ததால், என்ஜின்கள் மீண்டு வர போதுமான நேரம் இல்லை.

--> கட்டிடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலையக் காரணம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

--> விமானம் பறந்து செல்லும் பாதைக்கு அருகில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பறவை மோதியதால் விமான விபத்து நடத்திருக்கலாமா? என்கிற சந்தேகம் தீர்ந்துள்ளது.

சுவிட்ச் கட் ஆஃப் நிலைக்கு மாறியது எதனால்?

இருப்பினும் இந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில், பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. ஏர் இந்தியா விமானத்தின் கட்டளை விமானியாக 56 வயதான சுமீத் சபர்வால் இருந்தார். அவர் மொத்தம் 15,638 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். அவரது துணை விமானி கிளைவ் குந்தர், 32, அவருக்கு மொத்தம் 3,403 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இருந்தது. அறிக்கையில் எந்த விமானி "மேடே, மேடே, மேடே" என குறிப்பிட்டார்? விபத்துக்கு முன்பு கேப்டன் என்ன பேசினார்? போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

சுவிட்ச் எப்படி கட் ஆஃப் நிலைக்கு மாறியது என்பதற்கான காரணமும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. முதற்கட்ட விசாரணை அறிக்கையினை தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளது AAIB.