அரசியல்

கரூர் சம்பவம்: "அவதூறுகளைப் போக்கப் போராடுவோம்"- தவெக ஆதவ் அர்ஜுனா பேட்டி!

கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்:
Aadhav Arjuna
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாகவும், இதற்காக 16 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொய்யான தகவல்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை

செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது தங்கள் மீதான அவதூறுகள் குறித்தும், தவறான செய்திகள் குறித்தும் பேசத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய்யான தகவலைப் பரப்பி, கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

"எங்கள் மீதான அவதூறுகளைப் போக்கி, கரூரில் நடந்தது குறித்த உண்மைகளைக் கொண்டு வரப் போராடுவோம்," என்றார். தவெக-வை முடக்கும் நோக்கில் செயல்படுவதால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தாக்கல் செய்த முன் ஜாமீன் கோரிய மனுவை ஏற்கெனவே தனி நீதிபதி நிராகரித்திருந்த நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.