அரசியல்

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர்.. காரணம் என்ன?

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர்.. காரணம் என்ன?
PT Selvakumar
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யுடன் 20 ஆண்டுகளாக பயணித்த அவரது முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 'புலி' திரைப்படத்தைத் தயாரித்த இவர், தான் தலைமை வகிக்கும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்ததற்கான காரணங்கள்

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.செல்வக்குமார், தனது முடிவிற்கான காரணங்களை விளக்கினார். தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர் பாராட்டினார். மேலும், "தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக வந்துள்ளவர்களால் எங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு தூணாக இருந்தேன். ஆனால், தற்போது புதிதாகப் பலர் வந்துள்ளதால், என்னைப் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லை" என்றும் தெரிவித்தார்.

விஜய்யின் ரசிகர் மன்றத்திற்குக் கழகத்தில் தவெகவில் போதிய முக்கியத்துவம் இல்லை என்றும், எனவே, திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றும் வகையில் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் விளக்கினார்.

விஜய் மற்றும் தவெக குறித்த விமர்சனங்கள்

பி.டி.செல்வக்குமார், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கடைசியாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் என யாருமே தியாகிகள் கிடையாது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "தவெகவில் விஜய்யின் தந்தையையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, புதிதாக வந்தவர்களால் என்னைப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய் ஒரு நடிகராகச் சிறப்பாகப் பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன் என்றும், "விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியாக வழி நடத்துவாரா என்பது எனக்குத் தெரியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். விஜயைப் பார்க்கக் கூட்டம் வரும், ஆனால் "அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்கக் கூடாது" என்றும் அவர் விமர்சித்தார்.