வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து பாஜக அரசின் பெரும்பான்மை வாத பாசிசத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேப்பாக்கத்தில் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பின்னர் அவர் பேசியதாவது, “வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கொஞ்சம் கூட ஏற்கவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக கருத்துக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தை கொல்லுவதற்கு ஜனநாயகத்தையே பயன்படுத்துகிறார்கள். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயக படுகொலையை நிகழ்த்துகிறார்கள்.
சட்டத்தின் பெயரால் சட்டவிரோதமாக செயல்படுவது தான் நவீன பாசிசம். அரசு ஒரு மதத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படக் கூடாது என்பதுதான் மதசார்பின்மை. சட்டத்தை பயன்படுத்தியே அரசமைப்பு சட்டத்தை அழிப்பது தான் பாஜகவின் நவீன பாசிசம். இஸ்லாமியர்களுக்கு வெறுப்புணர்வை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே ஊரில் இரண்டு வகையான குடியிருப்புகள் ஒன்று சேரி மற்றொன்று ஊர் தெரு, இதை சொல்வதற்கு கேவலமாக இல்லையா? இதனை களைவதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்ன நடவடிக்கை எடுத்தது? மேலவளவில் படுகொலை செய்தது யார்? ஒரே சமூகத்தை சார்ந்த இந்துக்கள் தானே. மேல் பாதியில் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்ததும் ஒரே மதத்தை சார்ந்த இந்துக்கள் தானே. இதற்காக பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது? இந்துக்களை கோயிலுக்குள் அழைத்து செல்கிறேன் வா என இந்துக்களுக்காக பாஜக போராட்டம் நடத்தியதா?
இந்து சமூகத்தில் பரவி கிடக்கிற இந்த பாகுபாட்டை கலைவதற்கு என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறாய்? அடுத்து வரும் ஆட்சியாளர்கள் இந்த சட்டத்தை தூக்கி எறிய எவ்வளவு நேரம் ஆகும்? இன்னும் 30 வருஷம் ஆட்சியில் இருப்போம் என்று நீங்களாக முடிவு செய்து கொண்டீர்கள். ஆனால் அது நடக்காது. பாஜக என்னென்ன வழிமுறைகளை செய்து அநீதியை நிலைநாட்டியதோ, அதே வழிமுறைகளை செய்து நீதியை நிலைநாட்டுவோம்.
பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் காரணம் அரசியல் சட்டம் என்பது அல்ல பார்ப்பனர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சத்தில் தான். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு வேண்டாம். பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்கு மட்டுமே போதும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். எத்தனை சீட் வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல சட்டமன்றத்தில் எங்கள் சார்பில் ஒற்றை குரல் ஒலித்தாலும் அது எங்கள் கொள்கையின் குரலாக ஒலிக்கும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், வக்ஃபு திருத்த சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பாஜக அரசின் இந்த போக்கு ஒரு பாசிச போக்கு. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட மசோதாக்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டு வைத்தார்
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசு தலைவருக்கு அதனை அனுப்பி வைக்கிறோம் என்று கால தாமதம் செய்தார். இன்றைக்கு உச்சநீதிமன்றம் அதனை கண்டித்து இருப்பதோடு இந்த சட்ட மசோதாக்களை ஏற்கிறோம், அதனை சட்டம் ஆக்குகிறோம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புகட்டி இருக்கிற ஒரு பாடம் இது. சனாதன பின்புலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பாடமாக அமையும்.
ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகளோடு செயல்படக்கூடிய அனைவருக்குமான ஒரு பாடம். இது ஒரு மூக்குடைப்பு. ஆளுநர் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தட்டிக் கழித்தார். ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆனால் அவர் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை. தான் பெற்ற சனாதன அரசியல் பின்புலத்தை உயர்வாக கருதுகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதாக நினைத்து அவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார். அதற்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி உள்ளது.
ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி இருக்கிறார். அதில் கலந்து பேசி நீட் தேர்வு விளக்கு குறித்தான சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அரசியல்
சட்டத்தின் பெயரால் சட்டவிரோதமாக செயல்படுவது தான் நவீன பாசிசம்- திருமாவளவன் விளாசல்
சட்டத்தின் பெயரால் சட்டவிரோதமாக செயல்படுவது தான் நவீன பாசிசம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விளாசியுள்ளார்.