அரசியல்

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!
TN Governor Slams Govt on Education Womens Safety in Independence Day Speech
நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) ஆம் தேதி 79-வது சுதந்திரத்தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தற்கொலைகள், போதைப்பழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் உரை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையிலிருந்து சில தகவல்கள் பின்வருமாறு-

கீழ்காணும் விஷயங்களில் தமிழகத்தில் பிரச்னை நிலவுவதாக ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

i. ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு.
ii. அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு
iii. இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு
iv. பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள்- சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

மோசமடைந்த கல்வியின் தரம்:

”தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டிலும் நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான் மிகச்சிறந்த கல்வித்துறை உள்கட்டமைப்புகள் உள்ளன. வெளிப்படை காரணங்களால் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு, அரசின் கல்விக் கட்டமைப்புகள் ஒரே நம்பிக்கை. நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் வறியநிலை மற்றும்

விளிம்புநிலையில் இருப்பவர்கள். வருத்தமளிக்கும் வகையில், இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக, ASER அறிக்கை எனப்படும் கல்வித்தரம் பற்றிய வருடாந்திர அறிக்கை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியை விட மிகவும் குறைவானதாக இருக்கும் அதிர்ச்சி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை” என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் தற்கொலைகள்:

”தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது. ஆண்டொன்றுக்கு 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக, அதாவது அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.இது மிகஅதிர்ச்சி அளிக்கிறது. இது நாட்டிலேயே மிக அதிகம். லட்சம் மக்கள்தொகையில் 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. ஆனால் தமிழ்நாட்டிலோ இது 26-க்கும் அதிகமாக இருப்பது, தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.” என ஆளுநர் ரவி உரையாற்றியுள்ளார்.

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு:

”சமீபத்திய ஆண்டுகளில், நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்சோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. அலுவல்பூர்வ தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்ஸோ பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. நமது சகோதரிகளும், மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்” என ஆளுநர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.