அரசியல்

செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது 7 ஆதரவாளர்கள் நீக்கம்; "பதவி பறிப்பு மகிழ்ச்சி" எனச் செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது 7 ஆதரவாளர்கள் நீக்கம்;
செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது 7 ஆதரவாளர்கள் நீக்கம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சிப்பொறுப்புகளிலிருந்துது நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரின் கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தனது பதவி பறிப்பு குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். என்னைக் கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கியது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

கட்சிக்குள் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசிய செங்கோட்டையனின் பேச்சு, எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, செங்கோட்டையன் முதலில் தனது கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தற்போது அவரது ஆதரவாளர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் ஆதராவளர்களின் விவரம்:

* நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்: தம்பி (எ) K.A. சுப்பிரமணியன்

* நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்: M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி

* கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர்: N.D. குறிஞ்சிநாதன்

* அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்: M. தேவராஜ்

* அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்: S.S. ரமேஷ்

* அத்தாணி பேரூராட்சி துணைச் செயலாளர்: வேலு (எ) தா. மருதமுத்து

* ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்: K.S. மோகன்குமார்

இந்த அதிரடி நடவடிக்கைகள் கட்சிக்குள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு தனியாதொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன், “எனது பதவி பறிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று வெளிப்படையாகக் கூறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.