அரசியல்

செங்கோட்டையன் பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்'- அமைச்சர் ரகுபதி

செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்'- அமைச்சர் ரகுபதி
Minister Regupathy
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குறித்து, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று (நவம்பர் 28) புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

'ஸ்லீப்பர் செல்' செங்கோட்டையன்

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் ஆவார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர். நீண்டகாலம் அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிய செங்கோட்டையன், பா.ஜ.க.வால் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறார். செங்கோட்டையனை நான் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாகவே பார்க்கிறேன். இது விரைவில் நிரூபிக்கப்படும்" என்றார்.

த.வெ.க.வில் இணைந்ததற்கான காரணம்

தொடர்ந்து பேசிய அவர், "செங்கோட்டையன் பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆணையை மட்டுமே கேட்பவர். தமிழக வெற்றிக் கழகத்தை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பா.ஜ.க. கொடுத்த பணியை நிறைவேற்றவே செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் செங்கோட்டையனை பா.ஜ.க. ஏமாற்றியதால் த.வெ.க.வில் சேர்ந்தாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பா.ஜ.க. அவரை ஏமாற்றியிருந்தால் அவர் சென்றிருக்கமாட்டார்" என்று பதிலளித்தார்.

தி.மு.க. அழைப்பு குறித்து விளக்கம்

திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபு, செங்கோட்டையனை தி.மு.க.வில் சேர அழைத்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "ஒரு கட்சியை விட்டு வெளியேறியவரை அழைப்பது இயல்பானதே. நண்பர்கள் என்ற முறையில் அழைத்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை, ஏனெனில் அவர் ஸ்லீப்பர் செல்" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.