அரசியல்

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
AIADMK Symbol Case Update in Tamil

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அப்போது  கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை.

உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன என்றும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்த எவரும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் இல்லை. கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக உட்கட்சி விவகாரம்(AIADMK Symbol) தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் மட்டுமே  அனுப்பப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து,  ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதனால் இது சம்பந்தமாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என ரவீந்திரநாத், புகழேந்தி,  உள்ளிட்டோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பிதுள்ளனர்.