அரசியல்

2026-ல் கூட்டணி ஆட்சி.. புதிய தமிழகம் கட்சிக்கு பங்கு: கிருஷ்ணசாமி சூளுரை!

"2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு உண்டு" என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

2026-ல் கூட்டணி ஆட்சி.. புதிய தமிழகம் கட்சிக்கு பங்கு: கிருஷ்ணசாமி சூளுரை!
puthiya thamizhagam Krishnasamy Predicts Coalition Rule in 2026 Tamil Nadu Assembly Elections
தென்காசி நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.

பயிலரங்கத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

"வருகின்ற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெறவுள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நிச்சயமாக ஒரு கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். அந்த ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு நிச்சயமாகப் பங்கு இருக்கும். வெளிப்படையான, ஊழல் இல்லாத ஆட்சிக்குக் கூட்டணி ஆட்சி வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார்.

தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள்:

தி.மு.க.வினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை மிரட்டுவதாகவும், மக்களின் தகவல்களைத் திரட்டி அவர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "நான்கரை ஆண்டுகளில் தி.மு.க.வினர் சிறப்பாக ஆட்சி செய்திருந்தால், இப்போது ஏன் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சண்டை குறித்துக் கருத்து தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, கொள்கை அடிப்படையில் சண்டை போடுவது சரி என்றும், ஆனால் குடும்பப் பிரிவினையால் ஏற்படும் சண்டைகள் தவறு என்றும் கூறினார்.மேலும், சிறிய கட்சிகள் வளர வளர பெரிய கட்சிகளின் ஆதிக்கம் குறையும் என்றும், ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் தொடர்பான அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சியில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.