அரசியல்

சசிகலாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அவர் துரோகி.. மாநில செயலாளர் பளீர்..

சசிகலாவும் அதிமுகவின் துரோகிதான் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அவர் துரோகி.. மாநில செயலாளர் பளீர்..
சசிகலா மற்றும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவரும் துரோகிதான் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 50ஆயிரம் போலி ரேசன் கார்டுகளை வழங்கிய துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் அவர் மீது முதலமைச்சர் மற்றும் ஆளுநரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், “கடந்த மாதம் 18-ம் தேதி துணை நிலை ஆளுநர் தலைமையில் திட்டக்குழு கூட்டப்பட்டது. இவ்வாண்டிற்கான மாநில பட்ஜெட்டுக்காக ரூ.12 ஆயிரத்து 700 கோடி என திட்டக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஆட்சியில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கான அனுமதியை 25 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பட்ஜெட் அனுமதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை புதுச்சேரி மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு அவமதிக்கும் செயல்.

பட்ஜெட்டிற்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பை கூட புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட முடியாத அவல நிலை உருவாகியுள்ளது” என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், “புதுச்சேரியில் கையூட்டு பெற்றுக்கொண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீ ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதில் ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.36 கோடிக்கு மேல் அந்த போலி ரேஷன் கார்டுகளுக்கு அரசின் பணம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆதாரத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் கவனத்திற்க கொண்டு சென்றும் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?

இதில், ஒளிவு மறைவு இல்லாமல் மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் நடைபெற்று உள்ளது. புதுச்சேரியில் ஊழல் தடுப்பு பிரிவு ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதற்கு மேலும் துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் இந்த விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி அதிமுக சார்பில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அன்பழகன், “அதிமுகவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அனைவரும் விரோதிகள் தான். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவரும் விரோதி, துரோகி தான் என பலமுறை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி இந்த இயக்கத்திற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதான் புதுச்சேரி அதிமுகவின் நிலைபாடும்” என்றார்.