அரசியல்

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!

புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரி இன்று மாநிலக் காவல்துறையிடம் மனு அளித்துள்ளது.

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!
TVK
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரியில் டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி இன்று மாநிலக் காவல்துறையிடம் மனு அளித்துள்ளது. விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை தவெக எடுத்துள்ளது.

ரோடு ஷோ அனுமதி மறுப்பு

விஜய் நாளை (டிசம்பர் 5) புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரிக் காவல்துறையினர் ஆரம்பத்திலேயே அனுமதி அளிக்க மறுத்தனர்.

முதல்வருடனான சந்திப்பும் அனுமதி கோரிக்கையும்

இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை நேரில் சந்தித்துச் ரோடு ஷோக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை வைத்தார். முதல்வருடனான சந்திப்பின் போது, போக்குவரத்து நெரிசல் இல்லாத, சாலை அகலகமாக உள்ள சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு மட்டும் ரோடு ஷோ நடத்துவதற்கு ஆனந்த் அனுமதி கோரியதாகத் தெரிகிறது.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரியது ஏன்?

ரோடு ஷோ நடத்த புதுச்சேரிக் காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில டிஐஜி தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக, விஜய்யின் புதுச்சேரி பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் இன்று காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.