தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. முதலில் விழா மேடைக்கு வருகை தந்த கட்சித் தலைவர் விஜய்க்கு, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் வகையில் தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
விஜய் கையெழுத்திட்ட பேனரில், “ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்ட தினிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம்.” என்று எழுதப்பட்டிருந்தது.
விஜய்யைத் தொடர்ந்து get out பேனரில் கையெழுத்திட்ட என். ஆனந்த், அதன் பின்னர் பிரசாந்த் கிஷோரை கையெழுத்து போட அழைத்தார். ஆனால், அவர் வேண்டாம் என்று சைகை காட்டியபடி மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், அவர் கையெழுத்து போட மறுத்தது ஏன் என்ற விவாதமும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்த இந்த கையெழுத்து இயக்கம், பிரசாந்த் கிஷோரின் ஐடியாகவே இருக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கை, இந்தி மொழி எதிர்ப்பு என மத்திய அரசுக்கு எதிரான இதில் தான் கையெழுத்துப் போட்டால், தனது அரசியல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுத்துவிட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அதேநேரம், பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளர் மட்டுமே, அவர் தவெக நிர்வாகியோ தொண்டரோ அல்ல. அதனால் தான் அவர் கையெழுத்துப் போடவில்லை என தவெக தொண்டர்கள் விளக்கம்கொடுத்து வருகின்றனர்.