அரசியல்

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு
No Fascist Force Can Remove Even One Brick from the INDIA Alliance- selvaperunthagai
அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் என்ற கொள்கையின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம்தோறும் தேர்தல் ஆயத்தக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை, கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ரூபி மனோகரன், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் போது, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குப் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும், மூத்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பாசிசத்திற்கு எதிரான தேர்தல். இத்தேர்தல் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் போட்டியாகும். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வகையில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பாஜக எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிராகவே செயல்படும். சமஸ்கிருதம் என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியலில் பிரிவினையைத் தூண்டி பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவார்கள்.

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது நமது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,358 கோடி ரூபாய் நிதியை வழங்க மறுக்கிறது," என்று குற்றம்சாட்டினார். இதன் காரணமாக தமிழ்நாட்டு மாணவ மாணவிகளின் எதிர்காலக் கனவைச் சிதைக்க பாஜக அரசு முயல்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், "தமிழ்நாட்டில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 ஆயிரம் முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் ஒரு செங்கலைக்கூட எந்தப் பாசிச சக்தியாலும் அசைக்க முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்," என்றும் தெரிவித்தார்.