அரசியல்

அதிமுக பேனர் அகற்றம்.. கோபிசெட்டிபாளையத்தில் 'எம்ஜிஆர்-ஜெயலலிதா-விஜய்' பேனர்!

ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.

அதிமுக பேனர் அகற்றம்.. கோபிசெட்டிபாளையத்தில் 'எம்ஜிஆர்-ஜெயலலிதா-விஜய்' பேனர்!
Sengottaiyan changes the banner in the office
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவருக்குக் கட்சியின் உயர்மட்டப் பதவிகளை வழங்கித் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்குப் பொறுப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

த.வெ.க.வில் உயரிய பதவி மற்றும் மேற்கு மண்டலப் பொறுப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், நேற்று (நவம்பர் 27) விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படங்கள் அடங்கிய புதிய பேனர்

செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இருந்து அதிமுக பேனர் நேற்று அகற்றப்பட்டிருந்தது. இன்றைய தினம் காலை அங்கு புதிய பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அந்தப் பேனரில், அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன், த.வெ.க. தலைவர் விஜய் அவர்களின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கருத்துக்கள்

த.வெ.க. மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "மக்களின் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன். மேலும், அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்குத் தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும்" என்றும் அவர் கூறினார்.